மக்கள்நல பணியாளர்கள் பிரச்னை தமிழக அரசின் அப்பீல்: ஐகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை : மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மக்கள் நலப்பணியாளர்கள் 13500 பேரை தமிழக அரசு அண்மையில் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு அப்போது தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பதாக நீதிபதி சுகுணா அறிவித்தார். அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்தது. அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:
மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த ஆட்சியில் எந்த விதிமுறையும் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டனர். இதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாகத்தான் அவர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவுக்கு தனிநீதிபதி தடைவிதித்தது சட்டவிரோதமானது. இது தவிர உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் இன்று விசாரித்தனர். அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி மக்கள் நலப்பணியாளர்கள் தற்காலிக பணியாளர்கள். இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது தவறானது. நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். மக்கள் நல பணியாளர்கள் சார்பாக வக்கீல் சந்திரகுமார் ஆஜராகி, இது தொடர்பான வழக்கை நாளை நீதிபதி சுகுணா விசாரிக்க உள்ளார். எனவே தற்போது தடை எதுவும் விதிக்கக்கூடாது என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், Òதமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். நீதிபதி சுகுணா இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நல பணியாளர்கள் ஒன்றும் கால்பந்து அல்லÓ என்றனர்.