90 வினாடிகளில் முடிந்த ஒசாமா கொலை ஆபரேஷன்!
லண்டன்: அமெரிக்க வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட பிறகு குண்டு பாய்ந்து 90 வினாடிகளில் ஒசாமா பின்லேடன் மரணம் அடைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்மாமாத் அருகே உள்ள அபோதாபாத்தில், அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கடந்த மே மாதம் சுட்டுக் கொன்றனர். ஒசாமா மரணம் பற்றி பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அங்கு 45 நிமிடங்கள் ரெய்டு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் ஒசாமா இறந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், ஒசாமா பதுங்கி இருந்த கட்டிடத்துக்குள் புகுந்த 90 வினாடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது என்று அமெரிக்க வீரர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். ஒசாமா பதுங்கி இருந்த வீட்டுக்குள் அமெரிக்க கப்பல் படையின் சீல் சிக்ஸ் என்ற படை புகுந்து தாக்குதலில் நடத்தியது. இந்த படையின் முன்னாள் கமாண்டர் சுக் பாரர், தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். அதில், அபோதாபாத் கட்டிடத்துக்குள் புகுந்தவுடன் 90 வினாடிகளில் எல்லாம் முடிந்து விட்டது.
வீட்டின் மாடியில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கினோம். தரைதளத்தில் இறங்கவில்லை. மாடியில் இருந்து இறங்கி பின்லேடனை சுட்டுக் கொன்றோம். திரும்பும்போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. ஹெலிகாப்டர் தரைதளத்தில் இறக்கப்பட்டு, அதன்பின் படிக்கட்டில் ஏறி சென்றிருந்தால், அதற்குள் ஒசாமா உஷாராகி தன்னை காத்துக் கொள்ள கடுமையாக போராடி இருப்பார் என்று புத்தகத்தில் அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.