உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு கட்சியினர் பொறுப்பு ஏற்க வேண்டும் : தங்கபாலு பேட்டி
சென்னை : உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு கட்சியினர் எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். சென்னையில் அவர் இன்று அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். தேர்தல் முடிவு குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்கும். இந்த கூட்டத்தில், தோல்வி குறித்து விவாதிக்கப்படும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு, 3வது இடத்தை காங்கிரஸ் பிடித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை வைத்து காங்கிரஸ் கட்சியை எடை போட வேண்டாம். உள்ளாட்சி தேர்தல் வேறு, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். இந்த தோல்விக்கு கட்சியினர் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க முடியும். பலவீனத்தை களைய முடியும். இளங்கோவன், யுவராஜ் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலைப்படவில்லை. கட்சி விவகாரங்களை வெளியில் பேச வேண்டாம் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறேன். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கலவரத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்தான் காரணம்.
மத்திய அரசு மீது ஜெயலலிதா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்துவிட்டார். சோனியா காந்தியை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தது பற்றி கேட்கிறீர்கள¢. கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியை அவர் சந்தித்துள்ளார். இவ்வாறு தங்கபாலு கூறினார்.