பிரசாந்த் பூஷணை கைது செய்ய குரு ராம்தேவ் வலியுறுத்தல்!
லக்னோ: பிரசாந்த் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று பாபா ராம்தேவ் கூறினார்.காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அந்த மாநில மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்னாஹசாரே குழுவில் இடம்பெற்றள்ள வக்கீல் பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடந்த வாரம் பிரசாந்த் பூஷணை அவரது அலுவலகத்தில் வைத்து அடித்து உதைத்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலை சிவசேனா தலைவர் பால் தாக்கரே வரவேற்றிருந்தார்.இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் யோகா குரு ராம்தேவ் கூறியதாவது: பிரசாந்த் பூஷணின் கருத்துகள் அபாயகரமானவை. வெட்கக்கேடானவை. சமூக பிரசாரங்களில் தீவிரமாக பங்கேற்பவர்கள் பிரிவினைவாத கருத்துகளை தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது.
அன்னா குழுவில் இருப்பவர்கள் இதுபோன்று பேசினால் அவர்கள் மேற்கொள்ளும் சமூக பிரசாரங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காது. அவநம்பிக்கை தான் ஏற்படும். பிரசாந்த் பூஷண் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.