போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை!
சென்னை: சென்னை மாநகராட்சி 136-வது வார்டு தேமுதிக வேட்பாளராக மலர்மன்னன் போட்டியிடுகிறார். அப்பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, வேட்பாளர் மலர்மன்னன் அளித்த பேட்டி:
வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த வார்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குடியிருப்போர் குறைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன். சாலையோர சிறு கடைகளை ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவேன். சாலைகளை செப்பனிட்டு, பிரதான சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவேன்.
ஒவ்வொரு தெருக்களிலும் புகார் பெட்டி அமைத்து, தினமும் புகார்களை பரிசீலனை செய்து குறைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதிக்கு வரும் வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறின்றி நிறுத்த காவல் துறை, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்துவேன். அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனை உதவியுடன் சிறப்பு மருத்துவ சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு மலர்மன்னன் கூறினார்.