கொசுக்களை 100% ஒழிக்க முடியும்!
சென்னை: கொசுக்களை 100 சதவீதம் ஒழிக்க முடியும் என்று பாமக மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கூறினார்.
சென்னை மாநகராட்சி பாமக மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி இன்று காலை 9 மணி முதல் கொட்டிவாக்கம், பத்திரிகையாளர் குடியிருப்பு, பாலவாக்கம், மகாபலிபுரம் வரை வாக்கு சேகரித்தார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று வாக்கு கேட்டார். அப்போது ஏ.கே.மூர்த்தி பேசியதாவது:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது போல், முக்கிய சாலைகளை மக்கள் கடந்து செல்ல எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) அமைக்கப்படும். இதன்மூலம் வயதானவர்கள் எளிதில் சாலையை கடக்க முடியும். நடைபாதைகளில் பொதுமக்கள் மட்டுமே நடந்து செல்லும் அளவில் அழகுபடுத்தப்படும். இதன்மூலம் சாலையில் மக்கள் நடந்து செல்வது தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
தற்போது சென்னையில் கொசு பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மேயராக என்னை தேர்ந்தெடுத்தால் 100 சதவீதம் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். முடியாது என்று ஒன்று எங்கள் அகராதியில் இல்லை. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அதிகாரிகள் சில திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்றார்கள். ஆனால் நான் முழு முயற்சி எடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினேன். அதேபோல், கொசு பிரச்னைக்கும் சரியான தீர்வு கண்டுபிடித்து முற்றிலும் ஒழிக்க முடியும். இவ்வாறு ஏ.கே.மூர்த்தி பேசினார்.