ஒரிசாவில் சோகம் : டிப்பர் லாரி கவிழ்ந்து 17 பேர் பலி!
கோராபுட்: ஒரிசா மாநிலத்தில் தசரா விழாவில் பங்கேற்றுவிட்டு டிப்பர் லாரியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களில் 17 பேர் இன்று காலை லாரி கவிழ்ந்ததில் பலியானார்கள். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஒரிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பேடாபடார், மங்கலகுடா, பங்காகூடா, செம்பிதோடாகுடா கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40க்கும் அதிகமானோர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் தசரா விழாவை காண வந்தனர். இரவு பல்வேறு நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று அதிகாலை டிப்பர் லாரியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தசமந்தாபூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் சேர்த்தனர். மோசமாக காயம் அடைந்தவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.