குஜராத் அரசு ஊழியர்களுக்கு ரூ.2250 கோடி புது சலுகைகள்!
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் முதல்வராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, இன்று 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ரூ.2250 கோடிக்கு பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளார். மத்திய அரசின் 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, குஜராத் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. இதற்கான நிலுவைத் தொகை 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல் 2 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 3-வது தவணையாக ரூ.1377 கோடியை, 4.54 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பு ரொக்கமாக வழங்க நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். இதேபோல் மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வை மோடி அறிவித்துள்ளார்.
இதன்மூலம் மாநில அரசுக்கு ரூ.873 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மேலும் ஒரு லட்சம் அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.800 முதல் 4,400 வரை சம்பள உயர்வு, இந்த நிதியாண்டு இறுதிக்குள் 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற அறிவிப்புகளையும் மோடி வெளியிட்டுள்ளார்.