பயணிகள் மீது பஸ்சை ஏற்றி 7 பேரை கொன்ற டிரைவருக்கு வலை!
ஜெய்ப்பூர்: டிக்கெட் வாங்குவதில் பிரச்னை செய்த 17 பயணிகள் மீது பஸ்சை ஏற்றி 7 பேரை கொன்ற டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆக்ரா பகுதியை சேர்ந்த 17 பேர் ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி மாவட்டத்தில் உள்ள கேளாதேவி கோயிலுக்கு செல்ல நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் வந்தனர். ஜெய்ப்பூரில் இருந்து ஹிந்தாவுன் செல்லும் பஸ்சில் ஏறினர். வழியில் டிக்கெட் வாங்குவதில் கண்டக்டருடன் தகராறு ஏற்பட்டது. தடுக்க வந்த டிரைவர் பலமாக தாக்கப்பட்டார். கரவ்லி வந்ததும் 17 பேரும் இறங்கினர். கோயிலுக்கு வழி கேட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அங்கிருந்த பெட்ரோல் பங்க்கில் டீசல் போட்டுக் கொண்டு டிரைவர் மட்டும் பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தார். சாலையோரம் தன்னை தாக்கியவர்கள் நடந்து போவதை பார்த்தார். ஆத்திரம் அவரது கண்ணை மறைத்தது. பஸ்சை வேகமாக ஓட்டி சென்று 17 பேர் மீதும் மோதினார். இதில் ஒரு பெண் உள்பட 7 பேர் அதே இடத்தில் இறந்தனர். 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய டிரைவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.