அத்வானி ரத யாத்திரை சுஷ்மாவுக்காக மாற்றம்!
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜுக்காக எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, வரும் 11-ம் தேதி பீகாரில் இருந்து ரத யாத்திரையை தொடங்குகிறார். யாத்திரை பற்றிய விவரங்களை பா.ஜ. பொதுச் செயலாளர் அனந்தகுமார் நேற்று முன்தினம் டெல்லியில் வெளியிட்டார். 38 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை உ.பி., அரியானா, தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்கிறது.
அக்டோபர் 15-ம் தேதி மத்தியபிரதேசத்தில் விதிஷா பகுதியில் அத்வானி யாத்திரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. விதிஷா மக்களவை தொகுதி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், அதே தேதியில் டெல்லியில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். இதனால் அன்றைய தினம் விதிஷாவுக்கு அத்வானி வரும்போது தொகுதி எம்.பி. என்ற முறையில் அவரை வரவேற்க சுஷ்மாவால் முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அத்வானியின் மத்திய பிரதேச பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 13-ம் தேதி மத்திய பிரதேசத்துக்குள் நுழையும் அத்வானியின் ரதயாத்திரை, 16-ம் தேதி வரை அந்த மாநிலத்தில் பயணம் மேற்கொள்ளும். ஆனால் விதிஷா பகுதிக்குள் யாத்திரை செல்லாது. 16-ம் தேதி அத்வானி யாத்திரையில் சுஷ்மா கலந்து கொள்வார் என பா.ஜ. மேலிடம் அறிவித்துள்ளது.