கோயில் நிர்வாக குழுவில் எல்லா சாதியினரையும் சேர்க்க கேரள கோர்ட் அதிரடி உத்தரவு!
திருச்சூர்: கேரள மாநிலம் திருவம்பாடி கோயில் நிர்வாக குழுவில் அனைத்து சாதியினரையும் உறுப்பினராக சேர்க்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் திருவம்பாடி கோயில் உள்ளது. இங்கு நடக்கும் பூரம் திருவிழா தேசிய அளவில் புகழ் பெற்றதாகும். இந்த கோயில் நிர்வாக குழுவில் கடந்த 200 ஆண்டுகளாக உயர் சாதியினர் மட்டுமே உறுப்பினராக இருந்து வருகின்றனர்.
இதை எதிர்த்து திருச்சூரை சேர்ந்த சதானந்தன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஜனநாயக நாட்டில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என மனுவில் கூறியிருந்தனர். நிர்வாக குழுவில் இதுவரை பிராமணர்கள், நாயர்கள், அம்பலவாசிகள் போன்ற உயர் சாதியினர் மட்டுமே இடம் பிடித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த மனுவை மாஜிஸ்திரேட் என்.வி.ராஜூ விசாரித்து, திருவம்பாடி கோயில் நிர்வாக குழுவில் இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரையும் உறுப்பினராக சேர்க்க உத்தரவிட்டார். உயர் சாதியினர் மட்டுமே உறுப்பினராக வேண்டும் என்ற கோயில் உபவிதி செல்லாது என்றும் அவர் உத்தரவிட்டார்.