காங்கிரசை எதிர்த்து பிரசாரம் : ஹசாரே அதிரடி அறிவிப்பு!
ராலேகான் சித்தி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வலுவான ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், காங்கிரசை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்ய போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே அளித்த பேட்டி:
அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், உ.பி.யில் இருந்து காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் தொடங்குவேன். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்வேன். தேர்தலுக்கு முன்பாக உ.பி. மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.
அரியானா மாநிலம் ஹிசார் எம்பி தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். பாரதிய ஜனதா உள்ளிட்ட எல்லா கட்சிகளிடம் இருந்தும் எனக்கு ஆதரவு கடிதங்கள் வருகின்றன. காங்கிரசிடம் இருந்து ஒரு கடிதம் கூட வரவில்லை. எனது குழுவினர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.