ஒய்எஸ்ஆர் ஹெலிகாப்டர் விபத்து : அதிகாரிகள் மீது நடவடிக்கை!
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்துக்கு காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த 2009ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிஐ கடந்த ஜூலை மாதம் ஆந்திர அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சதி செயலும் இல்லை எனவும் மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வானிலை குறித்து ஹெலிகாப்டர் பைலட்டை எச்சரிக்காத விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமண ராவ் மற்றும் ஒய்எஸ்ஆர் பயணத்துக்கு புதிய ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்யாமல் பழைய ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்த ஏவியேஷன் கார்ப்பரேஷன் தலைவர் பிரமானந்தா ரெட்டி ஆகியோர் பணியில் தவறு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
பிரமானந்த ரெட்டி தற்போது ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே வாரியத்துக்கு ஆந்திர தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இதே போல் லட்சுமணராவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரலுக்கும் ஆந்திர அரசு கடிதம் எழுதியுள்ளது.