ராமேஸ்வரம், -தற்போது ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கிகளிலும் மொத்தமாக பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் இறால் மீன், கடல் நண்டு, கணவாய் போன்ற மீன்களுக்கு வியாபாரிகளால் உரிய தொகை வழங்க இயலாத நிலை உள்ளது.மேலும், படகுகளுக்கு டீசல், மீனவர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணமில்லாமல் படகு உரிமையாளர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, பணப்புழக்கம் சீரானவுடன் ஏற்றுமதி வகை மீன்கள், உள்ளூர் சந்தை மீன்கள் கொள்முதல் செய்யப்படும் என ஏற்றுமதியாளர்கள் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் நேற்று, மீனவர் சங்க தலைவர் கெட்டர் தலைமையில் மீனவ பிரதிநிதிகளின் அவசரக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ‘ஏற்றுமதியாளர்களின் அறிவிப்பை தொடர்ந்து படகுகளை கடலுக்கு அனுப்பாமல் இன்று முதல்() தொழில்நிறுத்தம் செய்வது, பணப்புழக்கம் சீரானவுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது குறித்து அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் படகுகள் அனைத்தும் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கரை நிறுத்தப்பட்டுள்ளன. படகு உரிமையாளர் சேசுராஜ் கூறுகையில், ``ரூ.500 பழைய நோட்டை மாற்ற ரூ.100 கமிஷன் கேட்கின்றனர். பாக்கி ரூ.400 தருகின்றனர். இதிலேயே 20 சதவீதம் இழப்பு ஏற்படும். கடலுக்கு சென்றாலும் வியாபாரிகள் மீன்களை வாங்க தயாராக இல்லை. எனவே, பணப்புழக்கம் சகஜமான பிறகே கடலுக்கு செல்ல உள்ளோம்’ என்றார்.இதேபோல் தூத்துக்குடியிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.1.25 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.