நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை இன்று முதல் மீண்டும் தொடங்கியது...கூட்டமாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
4/8/2021 6:38:48 PM
சென்னை: நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதையடுத்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும்பணி மீண்டும் இன்று காலை முதல் தொடங்கியது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இருந்த போதிலும் பொதுமக்கள், நிறுவனங்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு இன்னும் அமலில் இருந்து வருகிறது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் கொரோனா பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் மற்றும் அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். குறைந்தப்பட்சம் மாஸ்க் கூட அணிவது கிடையாது. அப்படியே அணிந்தாலும் ஒழுங்காக அணிவதில்லை. ஏதோ ஸ்டைலுக்கு அணிந்து செல்கின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்க விட்டு, கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், கடற்கரை பகுதிகள், பூங்காக்களில் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக சென்று பொழுதை கழிப்பது, மீன்மார்க்கெட், மட்டன், சிக்கன் கடைகளுக்கு படையெடுத்து செல்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பஸ், ரயில்களில் கூட்டம், கூட்டமாக முண்டியடித்து கொண்டு ஏறி பயணம் செய்வது என்று மக்கள் இருந்து வருகின்றனர். இதனால், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு இதே நேரத்தில் என்ன பாதிப்பு இருந்ததோ அதைவிட அதிகமாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருந்து வந்தது. இந்த பாதிப்பு நேற்று 4 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 1,459 பேர், செங்கல்பட்டில் 390 பேர், கோவையில் 332 பேர், திருவள்ளூரில் 208 பேர் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நேற்றும் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. பழைய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முன்னர் இதே போன்று பணியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக 16 ஆயிரம் களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் 100 மருத்துவர்கள் மற்றும் 4 ஆயிரம் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் அவர்கள் தங்கள் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது எப்படி வீடு, வீடாக சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டார்களோ அதே பணியை மீண்டும் செய்ய தொடங்கியுள்ளனர். வீடுகளுக்கு செல்லும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் காய்ச்சல், இருமல் உள்ளதா? வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்துள்ளார்களா? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இதே பணி தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் தெருக்களை தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் அரசின் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஒலிபெருக்கி மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களை எச்சரித்து, அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அபராத தொகையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.