சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 59.06% வாக்குகள் பதிவு: அதிகபட்சமாக ஆர்.கே.நகர் தொகுதியில் 66.57%
4/7/2021 5:21:49 PM
சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக ஓட்டுகள் பதிவான தொகுதி ஆர்.கே.நகர் 66.57%, குறைவான ஓட்டுகள் பதிவான தொகுதி வில்லிவாக்கம் 55.52 % ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021ம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 28,372 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்றுகட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 14,276 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.
மேலும் வாக்குப்பதிவான நேற்று வாக்காளர்களுக்கு தொடா வெப்பநிலைமானி மூலம் பரிசோதித்தும், கையுறைகளை பயன்படுத்தியும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தும், முகக்கவசம் அணிந்து நேற்று காலை 7 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கிடையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு மாலை நேரத்தில் வாக்களிக்க வரும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி இருப்பவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து வாக்குகளை பதிவு செய்தனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதாவது ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 66.57 சதவீதம், பெரம்பூர் 62.63, கொளத்தூர் 60.52, வில்லிவாக்கம் 55.52, திரு.வி.க.நகர் 60.61, எழும்பூர் 59.29, ராயபுரம் 62.31, துறைமுகம் 59.70, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 58.41, ஆயிரம் விளக்கு 58.40, அண்ணாநகர் 57.02, விருகம்பாக்கம் 58.23, சைதாப்பேட்டை 57.26, தியாகராயநகர் 55.92, மயிலாப்பூர் 56.69, வேளச்சேரி தொகுதியில் 55.95 சதவீதம் என மொத்தம் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், அதிக பட்சமாக ஆர்.கே.நகரில் 66.57 சதவீதமும், குறைவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குகள் பதிவான இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணாபல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.