75 வாக்கு எண்ணும் மையங்கள் சீல் வைப்பு: துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு..! 24 மணி நேரமும் சிசிடிவியில் பார்க்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
4/7/2021 5:17:12 PM
சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவத்தினர் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்புடன் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதை 24 மணி நேரமும் சிசிடிவியில் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணிக்கு முடிவடைந்த பின்னர், பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சீல் வைக்கப்பட்டு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தமிழகம் முழுக்க 75 மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அந்த மையங்களில் இரும்பு கம்பிகளால் தீயினால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு அறை சீலிடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் வரை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும். வாக்கு எண்ணும் மையங்களில் வேறு நபர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா–்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் என மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் தொகுதி வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கும் பணி இன்று காலை வரை நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்கள் தேர்தல் உயர் அதிகாரிகளால் சீலிடப்பட்டது.