திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டு இயந்திரங்களில் கோளாறு: பல மணிநேரம் வாக்குப்பதிவு பாதிப்பு
4/6/2021 5:35:14 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் முதல் சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவுக்கு காலதாமதமானது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், தொட்டிகளை கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு பட்டனை அழுத்தினால் அனைத்து வேட்பாளர்களின் பட்டனும் எரியத் தொடங்கியது. அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் மாற்று வாக்கு பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேரம் லேட்டாக வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவள்ளூர் நகரம், லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மையத்திலும் திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி அரசினர் கலை, அறிவியல் கல்லூரியிலும், பொன்னேரி தாலுகா காலஞ்சி கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலலும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதுபோல் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 462, 466 மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் உள்ள 417 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் வக்கீல் பிஎஸ்.அமுல்ராஜ், வடபெரும்பாக்கம் சின்ன தோப்பு பகுதியில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் வாக்குப்பதிவு செய்தார்.