புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்தனர்: திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களித்தனர்
4/6/2021 5:32:39 PM
திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவு வருமாறு: செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், சோழிங்கல்நல்லூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 1346534, பெண்கள் 1369458, திருநங்கைகள் 384 என மொத்தம் 27,16,385 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 3833 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 1932 வாக்குக்சாவடி மையத்தில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. பதற்றமான 699 வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும் முதல் முறையாக புதிய வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி நகராட்சி பள்ளியில் வாக்களித்தார். செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், ஆப்பூர் நடுநிலை பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், வேங்கடமங்கலம் அரசு பள்ளியிலும் வாக்களித்தனர்.
திருப்போரூர் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், திருக்கச்சூர் அரசு உயர்நிலை பள்ளியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாலாஜி, சோழிங்கநல்லூர் அரசு பள்ளியிலும் வாக்களித்தனர். செய்யூர் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், மேலமையூர் அரசு பள்ளியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு, பனையூரில் உள்ள அரசு பள்ளியிலும், மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், தையூர் அரசு பள்ளியிலும், மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, மாமல்லபுரம் அரசு பள்ளியிலும் வாக்களித்தனர். தாம்பரம் திமுக வேட்பாளர் எஸ்ஆர் ராஜா, தாம்பரம் நகராட்சி பள்ளியிலும் அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், பல்லாவரம் திமுக வேட்பாளர் இ.கருணாநிதி, பல்லாவரம் நகராட்சி பள்ளியிலும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சிட்லபாக்கம் அரசு பள்ளியிலும், சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் அரசு பள்ளியிலும் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன், கந்தன்சாவடியில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆலந்தூர் தொகுதியில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 857 வாக்காளர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்களும், உத்திரமேரூர் தொகுதியில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633 வாக்காளர்களும், காஞ்சிபுரம் தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 406 வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் 493 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 493 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 1872 வாக்குச்சாவடிகள் செயல்பட உள்ளன. இதில் ஆலந்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் 48 மையங்கள்,பெரும்புதூர் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகளில் 53 மையங்கள். உத்திரமேரூர் தொகுதியில் 28 வாக்குச்சாவடிகளில் 67 மையங்கள், காஞ்சிபுரம் தொகுதியில் 19 வாக்குச்சாவடிகளில் 77 மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 1872 வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான 2796 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1872 கண்ட்ரோல் யூனிட், 1872 விவிபிஏடி எந்திரங்கள் நேற்று இரவே அனுப்பி வைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வாக்களித்தார். காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசன் வைகுண்டபுரம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர். காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்களித்தார். உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர், சாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், செவிலிமேடு விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தனர்.
மாவட்டத்தில் 997 காவலர்கள், 124 ஆயுதப்படை காவலர்கள், 235 எல்லை பாதுகாப்பு காவலர்கள், 250 என்எஸ்எஸ் மாணவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 120 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 2 ஏடிஎஸ்பிகள், 7 டிஎஸ்பிகள், 14 இன்ஸ்பெக்டர்கள், 14 சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சார் ஆய்வாளர்கள் 76 பேர் உள்பட மொத்தம் 1857 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், பாண்டூர் டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது மனைவி இந்திரா ராஜேந்திரன், மகள் ஆர்.பிரியதர்ஷினி வருண், மகன் ஆர்.வசிஸ்ட் அத்வைத் ஆகியோருடன் வாக்களித்தார். திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவி லதாவுடன் சென்று வாக்களித்தார்.
கலெக்டர் பொன்னையா, முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் என்.சந்திரன், வாக்குப்பதிவு செய்தார். அதிமுக வேட்பாளர் கோ.அரி, அமுதாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்தார். அப்போது வாக்குப்பதிவு மெஷின் பழுதானதால் வாக்களிக்காமல் திரும்பி சென்றார். மெஷின் சரிப்படுத்தப்பட்ட பிறகு, தனது வாக்கை பதிவு செய்தார். தேமுதிக வேட்பாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, வாக்கை பதிவு செய்தார். கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். ஆவடி திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் பள்ளியில், தனது மனைவி பாத்திமா கனி, மகன் ஆசிம்ராஜா ஆகியோருடன் வந்து வாக்கை பதிவு செய்தார். ஆவடி அதிமுக வேட்பாளர் மாபா.பாண்டியராஜன், ஆவடி பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார். தேமுதிக வேட்பாளர் நா.மு.சங்கர், பட்டாபிராமில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் சார்லஸ், திருநின்றவூரில் உள்ள பள்ளியிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி, திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியிலும் வாக்கு அளித்தனர்.
அம்பத்தூர் அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியிலும், அமமுக வேட்பாளர் வேதாச்சலம், ெகாரட்டூரில் உள்ள தனியார் பள்ளியிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பு தென்னரசன், அம்பத்தூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தர். ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் சுமார் 15 நிமிடம் காலதாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பல வாக்குச்சாவடி மையத்தில் எந்தெந்த பகுதி வாக்குச்சாவடி என்று அறிவிப்பு பலகை வைக்காததால் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர். இவற்றை சரிப்படுத்த போதிய அதிகாரிகளும் இல்லை.பூந்தமல்லி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி வாக்குப்பதிவு செய்தார். திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.மைக்கேல் தாஸ், தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.