மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு
3/7/2021 5:33:57 PM
பூந்தமல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் மதுரவாயலில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: பாஜகவை தோற்கடிப்பது தமிழக மக்களின் கடமை, அதிமுக - பாஜக கூட்டணியை முறியடித்து தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். அடுத்து வரும் அரசு ஜனநாயகத்தை காக்க கூடிய அரசாக அமைய வேண்டும்.
மோடி அரசு பணக்காரர்களை மிகப் பெரிய சூப்பர் பணக்காரர்களாக ஆக்குகிறது. தனியார் மயத்தை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு பணக்காரர் 1 மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாதித்து வருகிறார். ஆனால் இந்தியாவில் 40 சதவீத மக்களின் மாத வருமானம் வெறும் 3 ஆயிரமாக உள்ளது. மோடி செல்லும் இடங்களில் எல்லாம் சுய சார்பு இந்தியா என்று கூறி வருகிறார். அதாவது செல்ப் ரிலையன்ஸ் என்கிறார்.
செல்ப் என்றால் மோடி, ரிலையன்ஸ் என்றால் அம்பானி. இவர்கள் இருவரும் நன்றாக இருக்க சுய சார்பு என்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 100 நாட்கள் எட்டி உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நியாயமான கோரிக்கைக்காக அன்னமிடும் விவசாயிகளுக்காக, அறவழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு செய்தது என்ன? மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. பாட்டுப்பாடும் சூத்திரதாரி மோடி, அவரது பாட்டுக்கு பின் பாட்டு பாடுபவர்கள் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும். தமிழகத்தில் பாஜக அதிமுக அணி முறியடிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று பாஜக அதிமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதேபோல தமிழக சட்டசபைத் தேர்தலிலும் அந்த அணி தொடர வேண்டும். மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியாவுக்கே தமிழகம் வழி காட்ட வேண்டும். இந்த வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவை, இந்திய குடியரசை, தேசத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், .பீம்ராவ், வாசுகி, சவுந்தரராஜன், சம்பத், தாமஸ், தண்டபானி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.