எனது பாட்டி இந்திராகாந்தி செய்தது தவறுதான்; எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது: ராகுல்காந்தியின் ஆவேச உரையாடல்
3/3/2021 5:52:09 PM
புதுடெல்லி: ‘எனது பாட்டி அவசர நிலையை கொண்டு வந்தது தவறுதான். எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது’ என்று ராகுல்காந்தி ஒரு உரையாடலில் தெரிவித்தார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்திய உரையாடலின் விபரம் வருமாறு: இந்தியாவின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி போராடியது. அரசியலமைப்பை உருவாக்கியது. சமத்துவத்திற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. என் பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அவசர நிலையை கொண்டு வந்ததை தவறு என்றே நினைக்கிறேன். அவரும் அதையே சொல்லி உள்ளார். காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் நாட்டின் அதிகார மையங்களை கைப்பற்ற முயற்சிக்கவில்லை.
காங்கிரசுக்கு அவ்வாறு செய்யும் திறன் கூட இல்லை. நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பினாலும், எங்களால் அப்படி செய்ய முடியாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டின் அனைத்து அதிகார மையங்களிலும் வலுவாக உள்ளனர். நாங்கள் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும், நாட்டின் அதிகார மையங்களில் இருந்து அவர்களை அகற்ற முடியாது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக கமல்நாத் இருந்தபோது, அரசுத் துறையில் இருந்த மூத்த அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் என்பதால், முதல்வர் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. இதைத்தான் கமல்நாத் அன்று சொன்னார். பாஜகவின் ஆணவத்தை எதிர்த்துப் போராட காங்கிரஸ் கட்சி அமைதியான முறையில் ேபாராட வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சியாக போராடி வருகிறோம். நாங்கள் அதிகாரத்தை கைப்பற்ற போராடவில்லை.
இந்தியாவுக்காக போராடுகிறோம். காங்கிரஸ் கட்சியினர் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பை ஒருங்கிணைக்க வேண்டும். எல்லா முனைகளிலும் இருந்து எதிர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்களது போராட்டம் எதிர்ப்பு மட்டுமேயின்றி வன்முறை பாதை அல்ல. வன்முறை பாதையை ஆதரிக்கவும் மாட்டோம். அதேநேரத்தில் இந்தியாவின் சக்தியை ஒன்றாக இணைப்போம். தற்போது நாட்டில் நடக்கும் ஆட்சியாளர்களின் ஆணவ போக்கால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. காங்கிரஸ் கட்சி, இந்த மக்களை ஒன்றிணைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் 2014ம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரத்திற்காக போராடவில்லை. இந்தியாவுக்காக நாங்கள் போராடுகிறோம்.
காங்கிரசின் உட்கட்சி ஜனநாயகத்தை மேம்படுத்த நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். இதற்காக எனது கட்சி நிர்வாகிகளால் விமர்சிக்கப்பட்டேன். உட்கட்சி ஜனநாயகத்திற்கு நான் ஆதரவாக உள்ளேன். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளில் தேர்தலை ஊக்குவிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி என்பது சுதந்திரத்திற்காக போராடிய அமைப்பு. ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்முறைகளை பாதுகாப்பது எங்களின் முக்கிய நோக்கம். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதி இல்லை. ஆர்எஸ்எஸ் - பாஜக போன்றவை மிகப்ெபரிய பொருளாதார சக்தியாக உள்ளது. மணிப்பூரில், ஆளுநர் பாஜகவுக்கு உதவி செய்கிறார். புதுச்சேரி ஆளுநர் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும், அவர்கள் எங்களை செயல்பட அனுமதிமதிப்பதில்லை. தற்போதைய பாஜக அரசால் இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உரையாடலில் பேசியுள்ளார்.