சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
3/2/2021 6:28:53 PM
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நேர்காணல் இன்று தொடங்கியது. இதில் 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 8388 பேர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். இதில் 7967 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது. மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது. இதில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேள்விகளை கேட்டார்.
அதில், கட்சியில் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறீர்கள், கட்சிக்காக உங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது, எந்தெந்த போராட்டங்களில் பங்கேற்றீர்கள், தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எந்தளவில் உள்ளது, ஆளுங்கட்சியின் செல்வாக்கு எந்தளவில் உள்ளது, திமுக குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் உள்ளிட்ட கேள்விகளை கேட்டார். மேலும், தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள், உங்கள் தொகுதியை கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கும்போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து பிற்பகல் 4 மணியளவில் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. நாளை காலை 9 மணிக்கு மதுரை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கும், மாலை 4 மணியளவில் திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக வரும் 6ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.