தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு
3/2/2021 6:27:34 PM
சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நாளை மறுதினம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்படும் என்று அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலத்தில் போட்டியிடுகிறவர்கள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த 26ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் என்ற அறிவிப்பை அதிமுக தலைமை வாபஸ் பெற்றது. மார்ச் 3ம் தேதிக்குள் (நாளை) அளிக்க வேண்டும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. பாமக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இது கட்சி தலைமைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய ஒரு மாதம் இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாமல், கட்சி பணிகளை கவனிக்கவும் முடியாமலும் அதிமுக திணறி வருகிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் 4ம் தேதி ஒரே நாளில் நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல். புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்பி விருப்ப மனு செலுத்திய அனைத்து அதிமுகவினரிடமும் நேர்காணல், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 4ம் தேதி (நாளை மறுதினம்) கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.
காலை 9 மணி முதல்
* கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்
* தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு
* திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு
* திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு
* புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி
* கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு
* சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு
பிற்பகல் 3 மணி முதல்
* கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு
* வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை
* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு
* திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு
* வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு)
* தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்கள்
* புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம்
இந்த நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட, விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமை கழகத்திற்கு வந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.