19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி
2/28/2021 5:30:31 PM
சென்னை: அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 செயற்கைகோள் உள்ளிட்ட 19 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி51 ராக்கெட்டை மூலம் இஸ்ரோ இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவியது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட அமசோனியா 1 செயற்கைகோள் அதன் 17 நிமிடத்தில் திட்டமிட்ட புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அமசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவிவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோள் பிரேசில் நாட்டின் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு, அந்நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவும். இதைத்தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் உட்பட 18 செயற்கைகோள்களும் 1 மணி நேர இடைவெளியில் அதன் திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தப்பட்டது.
செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் விஞ்ஞனிகள் மத்தியில் பேசியதாவது: பி.எஸ்.எல்.வி சி51 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் ஒரு உயரிய மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது கொடுத்துள்ளது. பிரேசிலை சேர்ந்த செயற்கைகோள் தயாரிப்பு குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வணிக ரீதியாக ஏவப்பட்ட 13 செயற்கைகோள்களை காட்டிலும் மற்ற 5 செயற்கைகோள்கள் தான் முகவும் முக்கியம் வாந்ததாக உள்ளது. மாணவர்கள் தயாரித்த இந்த 5 செயற்கைகோள்களும் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரமான அமைந்துள்ளது. 2021ல் மொத்தம் 14 திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டானது இந்த ஆண்டில் விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் ஆகும். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட் ஆகும்.