நுரையீரல் தொற்று; கொரோனா சிறப்பு வார்டில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை: இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு
1/22/2021 6:11:22 PM
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக இருக்கும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிட்-19 சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நுரையீரல் தொற்றினால் அவதிப்படுவதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு காரணமாக பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
நேற்று அதிகாலையில் மூச்சு திணறல் அதிகமிருந்ததால், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. பவுரிங் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்காக நேற்று பகல் 2 மணிக்கு கொண்டு செல்லப்பட்டார். சிடி ஸ்கேன் ரிசல்ட் வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் சந்தேகித்தனர். அதை உறுதி செய்யும் வகையில் இரவு 8.30 மணிக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை ரிசல்ட் வந்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. விக்டோரியா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயந்தியும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தவுடன் விக்டோரியா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட்-19 சிறப்பு மருத்துவமனை பிரிவுக்கு சசிகலா மாற்றம் செய்யப்பட்டார்.
சசிகலாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதிப்புகள் இருப்பதால், பரிசோதனை அடிக்கடி நடத்தப்படுகிறது. சசிகலா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் நிரந்தரமாக டாக்டர், நர்சு உள்ளிட்ட ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுகிழமை வரை சசிகலாவை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் சசிகலாவுடன் பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.