கல்குவாரிக்கு லாரியில் ஏற்றி சென்ற வெடி பொருட்கள் வெடித்து 11 பேர் உடல் சிதறி பலி: கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்
1/22/2021 6:08:44 PM
பெங்களூரு: கல் குவாரிக்கு லாரியில் வெடி பொருட்கள் ஏற்றி சென்றபோது, திடீரென வெடி மருந்து வெடித்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஷிவமொக்கா தாலுகா, ஹுணசோடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. பாறைகளை வெட்டி எடுக்க பயன்படுத்தும் வெடி பொருட்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவரப்படுகிறது. அதன்படி வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்த லாரி நள்ளிரவு ஹுணசோடி வந்தபோது, திடீரென லாரியில் இருந்த வெடி பொருட்கள் வெடித்தன. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தினால் ஷுணசோடி கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பூகம்பம் ஏற்பட்டது போல், மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 60 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள பல வீடுகள், வர்த்தக கட்டிடங்களில் விரிசல் விழுந்துள்ளது. சில வீடுகள் இடிந்து விழுந்தன. பல வீடுகள் சிதறின. வெடி விபத்து நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பயங்கர சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடி வந்தனர். எந்த இடத்தில் என்ன நடந்தது என்பது புரியாமல் தவித்தனர். ஷிவமொக்கா ஊரக போலீசார், உடனடியாக நில நடுக்கம் எங்கு நடந்தது என்பதை கண்டறிய ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். ஹுணசோடி கிராமத்தில் லாரி ஒன்று வெடித்து சுக்கு நூறாக சிதறி எரிந்து கொண்டிருந்தது. போலீசார் உடனடியாக தீயணைப்பு அலுவலகத்திற்கும் மொக்கான் மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்து பார்த்தபோது, லாரியில் 11 பேர் உடல் சிதறி பலியாகி இருப்பது தெரிந்தது. சிலர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மெக்கான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடி பொருட்கள் வெடித்த சத்தம் ஷிவமொக்கா மட்டுமில்லாமல் பத்ராவதி, தீர்த்தஹள்ளி, ஹொசநகர் ஆகிய தாலுகாக்கள் மட்டுமில்லாமல் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா வரை கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷிவமொக்கா தொகுதி மக்களவை உறுப்பினர் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா, ஷிவமொக்கா ஊரக தொகுதி எம்எல்ஏ அசோக்நாயக் உள்பட அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஷிவமொக்கா ஊரக போலீசார், கல் குவாரிக்கு வெடி பொருட்கள் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், டிரைவர் குடி போதையில் புகைப்பிடிப்பதற்காக தீ பெட்டி பற்ற வைக்கும்போது, தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். விபத்தில் பலியான கூலி தொழிலாளர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
ஹுணசோடி கிராமத்தில் நள்ளிரவில் நடந்த வெடி விபத்து காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நடுக்கம் இன்னும் நீங்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் ெதரிவித்துள்ளார். இதனிடையில் வெடி விபத்து நடந்த இடத்திற்கு பெங்களூரு மற்றும் மங்களூருவில் இருந்து வெடி மருந்து நிபுணர்கள் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள். விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ஷிவமொக்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.