குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி: டெல்லி போலீசாருடன் விவசாயிகள் இன்று சந்திப்பு
1/21/2021 5:10:16 PM
புதுடெல்லி: குடியரசு நாளில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்குமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 மாநில விவசாயிகள் இன்று டெல்லி போலீசாரை சந்தித்து, முறைப்படி கடிதம் கொடுக்க உள்ளனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 57 நாட்களாக டெல்லியின் நுழைவு வாயில்களில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறாவிட்டால் வரும் 26ம் தேதி குடியரசு நாளில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என்றும் இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இப்பேரணிக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘குடியரசு தினத்தன்று விவசாயிகள் இடையூறு செய்யும் பட்சத்தில் அது நாட்டின் ஜனநாயக உரிமைக்கு எதிராக அமைந்து விடும். இதனால் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘‘விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது.
அதில் முகாந்திரம் இல்லை. ஏனெனில் இது முழுவதுமாக சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை. இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதில் முடிவெடுக்க வேண்டியது டெல்லி போலீஸ்தான். அதற்கான அதிகாரத்தை அரசுதான் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஒரு போராட்டத்தை நடத்த அல்லது தடுத்து நிறுத்த முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மனுவை திரும்ப பெற அனுமதிக்கிறோம்’’ என்றார். இதனால் மத்திய அரசு தரப்பில் வேறு வழியின்றி மனுவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து, 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேரணி வழித்தடம், முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று காலை டெல்லி போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர்.
அப்போது பேரணிக்கான அனுமதி கோரி கடிதம் அளிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் டெல்லி போலீசார் அனுமதி அளிக்காவிட்டாலும், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். ‘‘பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு நாங்கள் கடிதம் கொடுப்பது, முறையான அணுகுமுறை. ஆனால் டிராக்டர் பேரணி நடத்துவது என்ற முடிவில் மாற்றமில்லை. போலீசார் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் டிராக்டர் பேரணி, நாங்கள் அறிவித்துள்ள வழித்தடத்தில் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘குடியரசு நாளில் டெல்லியிலேயே புறநகர் ரிங் ரோடுகளில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கிறோம் என்று போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அறிவித்த வழித்தடங்களில்தான் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
மேலும் ஒரு விவசாயி தற்கொலை
டெக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டம், பகசாமா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெய் பகவான் ராணா, நேற்று உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷம் கலந்த உணவை உண்ட பின்னர், தொடர்ந்து அவர் வாந்தி எடுத்துள்ளார். சக விவசாயிகள் அவரை டெல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை அவர் உயிரிழந்து விட்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில், ‘நான் சிறிய விவசாயி. என்னைப் போல் பலர், இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட 2, 3 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்தான் பிரச்னை செய்கிறார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்த்து வருகிறார்கள். மத்திய அரசு இதை உணர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.