தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடி உயர்வு
1/20/2021 5:12:53 PM
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. 18 வயது நிறைவடைந்த 9 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 1.1.2021ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாமும் நடைபெற்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.99 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 4.43 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.36 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.88 லட்சம் பேர் என மொத்தம் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேரும், இதர பிரிவினர் 7,246 பேரும் உள்ளனர்.
அதிகப்பட்சமாக சென்னை மாவட்டத்தில் 40,57,360 வாக்காளர்களும், குறைந்த எண்ணிக்கையில் நீலகிரியில் 5,85,049 வாக்காளர்களும் உள்ளனர். 18 வயது நிறைவடைந்தவர்கள் 8,97,694 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டபின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 6 கோடியே 27 லட்சம் வாக்காளர் உள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 3,09,292 பேருக்கு அவர்கள் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1,75,365 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.