சோழவரத்தில் சமத்துவ பொங்கல்: மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
1/13/2021 5:31:58 PM
புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல், தமிழர் பண்பாட்டு விழா, சோழவரம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் வைத்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜாதி, மதம் இன்றி சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும். சமத்துவம் கல்வியில் கொண்டு வர வேண்டும். இப்போது, நீட் தேர்வு வந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவம் படிக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவரை அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆதரித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அது புரியாத புதிராக இருக்கிறது.
4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. மாற்றத்தை தமிழக மக்கள் விரும்புகின்றனர். நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். சமத்துவ பொங்கல், பெரியார் கண்ட கனவு. எல்லா மதத்தினரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணம் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அனைத்து பகுதிகளிலும் சமத்துவபுரம் கொண்டு வந்தார். அதை, இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. 1957ம் ஆண்டு திமுக போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றனர். குளித்தலையில் கலைஞர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு சென்றதும், கன்னி பேச்சில், ‘விவசாய பிரச்னை குறித்து குரல் எழுப்பினார்.
விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் விவசாய சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் போராடிய விவசாயிகள் அனைவரும் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1989ல் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் கோரிக்கைளை ஏற்று, மின்சார கட்டணத்தை ரத்து செய்தார். 2006ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெற்ற விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக ரத்து செய்தார். இதில் அதிமுகவினரே அதிகமாக பயன் பெற்றனர். கலைஞர், கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றினார். தை பிறந்தால் வழிபிறக்கும். இது ஆண்டு தோறும் நடக்கிறது. இந்த தை பிறந்ததும் வழி பிறக்கும். நீங்க ரெடியா, நாங்கள் ரெடி. இவ்வாறு அவர் கூறினார்.