நாளை மறுநாள் அவனியாபுரம் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு: ஜல்லிகட்டு போட்டியை பார்வையிடுகிறார்
1/12/2021 5:56:13 PM
சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அப்போது அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரசும் தேர்தல் பணிகளை முடுக்கவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வர உள்ளதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, இம்மாத இறுதியில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மெகா ரோடு ஷோ பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் ராகுல்காந்தி பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக பங்கேற்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது ஒரு நாள் பயணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அன்றைய தினம் அவனியாபுரத்தில் நடக்கும் உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் பண்டிகையாம் பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக கலந்து கொள்ள ராகுல்காந்தி வருவது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசார் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மதுரை வருகை தரும் அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனையும் நடத்துகிறார்.
அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட கூட்டணி கட்சி விவகாரங்கள் குறித்தும் அப்போது ராகுல்காந்தி முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்துகிறார். அப்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு தேசிய கட்சியான பாஜ தலைவர் ஜெ.பி.நட்டாவும் அதே நாளில் சென்னை வருகிறார். அவரும் இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபெரும் தேசிய தலைவர்கள் ஒரே நாளில் தமிழகம் வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.