தமிழர் திருநாளை தமிழகமெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
1/11/2021 5:35:07 PM
சென்னை: தமிழர் திருநாளை தமிழகமெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் நீண்ட காலமாகக் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை, தமிழக மக்கள் நம்பிக்கையுடன் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குக் காரணம், தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகி, உதயசூரியன் ஆண்டாக இது அமையும் என்பது தான். உலகத்தாருடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுகிற அதேவேளையில்,
உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்பை, அதன் பண்பாட்டு அடையாளங்களை, உழைக்கும் மக்களான உண்மையான விவசாயிகளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக தமிழர் திருநாளாக பொங்கல் விழாவினைக் கொண்டாடுவதை பண்பாட்டு மறுமலர்ச்சியாகக் கட்டமைத்த வரலாற்றுச் சிறப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு. உழைப்பின் மேன்மையைப் போற்றி, அந்த உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை, உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளே தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளாகும். உலகின் மூத்த குடியான தமிழ்க் குடிக்கேயுரிய தனித்துவமான இந்தப் பண்பாடு மறுமலர்ச்சி காண வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன்,
தமிழர் திருநாளாகப் பொங்கல் விழா ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடும் வழக்கம் கடந்த முக்கால் நூற்றாண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மதச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை, அவரவர் வழிபடும் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு, அதற்கும் மேலாக உலகிற்கே வாழ்வளிக்கும் சூரியனை வணங்கி, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளையும் மறக்காமல் அவற்றுக்கு நன்றி பாராட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போலச் சிறப்பு மிக்க இன்னொரு விழாவை பண்பாடு போற்றும் பண்டிகையைக் காண முடியாது.
அதனால் தான் திமுக, பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே, பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் எத்தனையெத்தனையோ பொங்கல் விழா கவியரங்கங்கள் - பட்டிமன்றங்கள் என இன்பத் தமிழ் பொங்கியது. தமிழர் பண்பாட்டு அடையாளமான வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்காலத்திற்கேற்ற விளையாட்டுகள், வேடிக்கைகள் ஆகியவையும் பொங்கல் திருநாளையொட்டி மூன்று நாட்கள் கொண்டாடும் வழக்கமும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெருகியது. தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், பொங்கல் விழாவுடன் திருவள்ளுவர் நாளையும் இணைத்து கொண்டாடப்பட்டது.
அத்துடன், தமிழர்களின் ஆண்டுக் கணக்காகத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கும், மறைமலையடிகள் ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட பலநூறு தமிழறிஞர்களின் ஆய்வுப்பூர்வமான விருப்பத்தின்படி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற காலக் கணக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொங்கல் விழாவுக்காக அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்கி இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் தலைவர் கலைஞர் தான். ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளைப் போற்றிப் பாராட்டி,
பொதுமக்களின் பங்கேற்புடன் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது திமுக. அதே உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சமத்துவப் பொங்கல் வைத்து இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 13ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14ம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் உங்களில் ஒருவனான நானும் பங்கேற்கிறேன். மார்கழித் திங்களின் கடைசி நாளிலும், தை முதல் நாளிலும் தமிழகத்தில் எங்கெங்கும் பொங்கட்டும் சமத்துவப் பொங்கல்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் சமத்துவப் பொங்கல் சிறக்கட்டும். தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். அவர்களின் வாழ்வின் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.