34வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை: இன்று நடக்கவிருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏன்?
12/29/2020 6:19:53 PM
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 34வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருந்த நிலையில் திடீரென மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இன்றுடன் 34வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து இன்று (டிச. 29) பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசுக்கு விவசாய அமைப்புகள் கடிதம் எழுதியிருந்தன.
மேலும், வேளாண் சட்டங்களை நீக்குவது போன்றவற்றை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து இருந்தன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நாளை (டிச. 30) நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. 40 விவசாய அமைப்புகளுடன் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், ‘வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தர்க்க ரீதியான தீர்வை கண்டடைவதில் மத்திய அரசு திறந்த மனதுடனும், தெளிவான நோக்கத்துடனும் உள்ளது’ என்று அரசின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்திருந்த, 3 சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை 29ம் தேதி (இன்று) நடத்துமாறு விவசாயிகள் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு 30ம் தேதியை(நாளை) தேர்வு செய்துள்ளது. நாளை விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.