பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை
12/4/2020 5:08:32 PM
பொன்னேரி: பொன்னேரி அருகே நேற்று நள்ளிரவு கட்டிட கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதன் (51). கட்டிட கான்ட்ராக்டர். இவர், இப்பகுதியில் திமுக கிளை கழக செயலாளராக உள்ளார். அதே பகுதியில் உள்ள இவரது உறவினர் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் நேற்று காலை அவரை அழைத்துக் கொண்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு உறவினரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் திறந்து கிடந்த பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, முனிநாதன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன், கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்வெளி வரை ஓடிச் சென்று நின்றது. வழக்கு பதிவு செய்த பொன்னேரி போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொன்னேரி உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.