90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை
12/3/2020 6:41:51 PM
சென்னை: வங்கக்கடலில் பாம்பனில் இருந்து 90 கிமீ தொலைவில் புரெவி புயல் மணிக்கு 12 கிமீ வேகத்தில் நெருங்கி வருகிறது. இப்புயலின் தாக்கத்தால் நேற்று காலை முதலே ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், ராமேஸ்வரத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முற்றிலும் முடங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், கடந்த மாதம் நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மரங்களும், வீடுகளும் சேதம் அடைந்தது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த 1ம் தேதி வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் நாளை அதிகாலை குமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இது கனமழையாக இன்று காலை முதல் பெய்யத்துவங்கி உள்ளது.
புரெவி புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, பாம்பனை நெருங்கி வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிமீ வேகத்தில் பாம்பனை நோக்கி நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலை மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.புரெவி புயல் இன்று நண்பகலில் பாம்பன் அருகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 4ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று இரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன். மண்டபம். தனுஷ்கோடி கடல் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதலே ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பலத்த மழை கொட்டுகிறது. இன்று காலை 8 மணி வரை ராமேஸ்வரம் தீவில் மட்டும் 27 செமீ மழையும், ராமேஸ்வரம் நகர் பகுதியில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது.தொடர் மழையால் ராமேஸ்வரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடல் கடும் கொந்தளிப்பாக உள்ளது. கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளதால் பாம்பன் தெற்குவாடி, வடக்கு கடற்கரை பகுதியில் கடல் நீர் புகுந்தது. தனுஷ்கோடி, பாம்பன் முந்தல் முனை, சின்னப்பாலம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருவாய் துறையினரால் அழைத்து வரப்பட்டு, ராமேஸ்வரம், பாம்பனில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழையால் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் வீசும் பலத்த காற்றினால் குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து, கரை ஒதுங்கியது. இந்தநிலையில் ராமேஸ்வரம் தீவை சுற்றிலும் கடல் மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம் வடகாடு கடற்கரை, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல்நீர் புகுந்துள்ளது. புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் இன்று சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. துறைமுகம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இன்று காலை நிலவரப்படி காரைக்காலில் 16.4 செ.மீ, வேதாரண்யத்தில் 19 செ.மீ, திருத்துறைப்பூண்டி 13 செ.மீ, குடவாசல் 10 செ.மீ, திருவாரூர் 9 செ.மீ, நன்னிலம் 8 செ.மீ, மன்னார்குடி 7 செ.மீ, பாபநாசம் 6.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்தது. திருப்போரூர், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, திருவிக நகர், கும்மிடிப்பூண்டி, புழல், செங்குன்றம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருத்தணி, பல்லாவரம், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, வாலாஜாபாத், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அயனாவரம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிவு இருந்தது. பல இடங்களில் இடியுடன் கனமழையும் பெய்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது. புறநகர் பகுதிகளில் தேங்கிருந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்துள்ளது.