5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு?
11/6/2020 5:26:16 PM
* டிரம்ப் ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு பேஸ்புக் தடை மக்கள் அமைதி காக்கும்படி ஜோ பிடன் வேண்டுகோள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 5 மாகாண தேர்தல் முடிவு தாமதம் மற்றும் டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 12ம் புதிய அமெரிக்க அதிபர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் ஆதரவாளர்களின் ஆன் லைன் பிரசாரத்துக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது. மக்கள் அமைதி காக்க ஜோ பிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவர்தான், அமெரிக்க அதிபர் பதவிக்கு ேதர்ந்தெடுக்க முடியும். கடந்த 3ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இதில், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளையும், தற்போதைய அதிபரான குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜோ பிடனுக்கு 50.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
முன்னாள் துணை ஜனாதிபதி பிடன் இப்போது அமெரிக்காவின் 46வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுதேர்தலைக் கோரும் டிரம்ப், 50 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா (3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய 5 மாகாணங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது. ஜோ பிடன் முன்னிலை வகிக்கும் நெவாடா (6) தவிர மீதமுள்ள அனைத்து மாகாணகளிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாகாணத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் டிரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வருகிறார். இதனால் ஜோ பிடன் பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவார் என்று ஜனநாயக பிரசாரக் குழு தெரிவிக்கிறது. பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரியவந்துவிடும் என்று மாநில செயலாளர் கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றியின் விளிம்பில் உள்ள ஜோ பிடன் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். நாம்தான் வெற்றியாளர் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வாக்குகளை எண்ணிக்கை முடிவு அறிவிக்கும் வரை அமைதி காணுங்கள். வாக்கு எண்ணிக்கை முடியும் போது நானும், கமலா ஹாரிசும் (துணை அதிபர்) வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்’ என்றார். டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தபால் வாக்குப்பதிவில் 5 மாகாணங்களில் மோசடி நடந்துள்ளது. இது ஊழலுக்கு காரணமாகி உள்ளது. செல்லுபடியாகும் வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால், நான் வென்றிருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 50 மாகாணங்களில் நடந்த ேதர்தலில் 45 மாகாணங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 மாகாணங்களான பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா மற்றும் விஸ்கான்சின் ஆகிய இடங்களில் இன்று (நவ. 6), 9 மற்றும் 12ம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்படும். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க அதிபர் டிரம்ப் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதால், முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாக தாமதமாகும். டிரம்பிற்கு நீதிமன்றத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நவ. 12ம் ேததி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்காவின் பல நகரங்களில், ‘ஒவ்வொரு நபரின் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்’ என்று மக்கள் டிரம்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ‘திருடுவதை நிறுத்து’ என்ற பிரசாரத்தைத் தொடங்கிய டிரம்ப் ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இவர்களின் ஆன்லைன் பிரசாரத்துக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது. குழுவில் வன்முறையைப் பரப்ப வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஜோ பிடன் ஆதரவாளர்கள் ‘வாட் கவுண்ட்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தையும் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் மனு தள்ளுபடி
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 நாட்களாக இழுபறியில் உள்ள நிலையில், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்’ என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மாகாண விதிகளை பின்பற்றக்கோரி டிரம்ப் தரப்பில் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள்ளார்.
நல்ல சினிமா பாருங்கள்!
அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை நெருங்கி வரும்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரெட்டா துன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் (டிரம்ப்), ஒரு நல்ல திரைப்படத்தைப் பாருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.