கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?
10/18/2020 6:33:45 PM
திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா, அமலாக்கத்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிவசங்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 23ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுங்க இலாகாவினர் திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவசங்கர் மனைவி டாக்டராக பணிபுரிந்து வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசாேதனை செய்யப்பட்டதில் இதய செயல்பாட்டில் குறைபாடு இல்லை என்பது தெரிய வந்தது. அவருக்கு ரத்த அழுத்தமும் சீராக இருந்தது. ஆனால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிவசங்கருக்கு சுங்க இலாகா கண்காணிப்பில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிவசங்கருக்கு எதிராக சுங்க இலாகாவுக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி கைது செய்யவும் சுங்க இலாகா தீர்மானித்திருந்தது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கஸ்டடியில் வைத்திருந்து, திங்கள்கிழமை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் சிவசங்கரின் புதிய நாடகத்தால் திட்டம் தோல்வியடைந்தது.
ஜூலை 5ம் தேதி தங்க கடத்தல் விவகாரம் வெளியே வந்தது. அதன்பின்னர் சொப்னாவுடனோ, அவரது கும்பலுடனோ தொடர்பு கொள்ளவில்லை என்று சிவசங்கர் விசாரணையில் கூறியிருந்தார். ஆனால் ஜூலை 5ம் தேதி இந்த வழக்கில் முக்கிய நபரான சந்தீப் நாயருடன் சிவசங்கர் தொடர்பு கொண்டதற்கான முக்கிய ஆதாரங்கள் சுங்க இலாகாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய நபரான தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் ரமீஸுடன் சிவசங்கர் இணைந்து எடுத்த புகைப்படமும் கிடைத்துள்ளது. அலுவல் ரீதியான பயணத்துக்குக்கூட சிவசங்கர் தனது சொந்த பாஸ்பார்ட் மற்றும் டூரிஸ்ட் விசாவையும் பயன்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சொப்னா ரூ.3.80 கோடியை டாலராக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தி உள்ளார். அதற்கு சிவசங்கர் உதவியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சிவசங்கரை கைது செய்ய சுங்க இலாகா தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் கைது நடவடிக்கை இருக்கும் என்று தெரிந்துதான் சிவசங்கர் நாடகமாடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, சுங்க இலாகா அவரை கைது செய்வதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நாளை முன்ஜாமீன் கோரி சிவசங்கர் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை முறியடிக்கும் வகையில் சுங்க இலாகா டெல்லியில் இருந்து பல மூத்த வக்கீல்களை களம் இறக்க தீர்மானித்துள்ளது. மேலும், சிவசங்கரின் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு அளிக்கவும் சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.