ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை
9/26/2020 6:11:38 PM
ஜெனீவா: ஐ.நா-வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். இதற்கிடையே பிரதமர் மோடி இன்று மாைல ஐ.நா பொதுசபையில் காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் கூட்டத்தில் உரையாற்றினார். இவர், ஐ.நா-வில் தனது உரையைத் தொடங்கியபோது, ஐ.நா பொதுச் சபை மண்டபத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி வெளிநடப்பு செய்தார். இம்ரான்கான் பேசும்போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். இதுகுறித்து இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கையில், பொய்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமே இருந்தன. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை துன்புறுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பேசவில்லை. .
தீவிரவாதத்தின் மையமாக அறியப்படும் ஒரு நாட்டிடம் இருந்து மனித உரிமைகள் குறித்த பாடங்களை உலகத்திற்கு எடுக்கத் தேவையில்லை’ என்றார். மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர செயலாளர் செந்தில் குமார், ‘இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் கேவலமான கருத்துக்களை தெரிவிக்க, பாகிஸ்தான் அவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறது. இது அவர்களின் மனதின் எதிர்மறையான நிலைப்பாட்டைக் காட்டுகிறது’ என்றார். இதற்கிடையில், ஐ.நா-வின் 75வது பொதுச் சபை அமர்வில் பிரதமர் மோடி இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) காணொலி மூலம் உரையாற்றவுள்ளார். தீவிரவாதம், கொரோனா பரவல் தடுப்பு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றும் முதல் பேச்சாளராக பிரதமர் மோடி இருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.