உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி
9/26/2020 6:10:34 PM
கியேவ்: உக்ரைனில் ராணுவ பயிற்சி விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானி உட்பட 25 பேர் பலியாகினர். வடகிழக்கு உக்ரைனில் நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணி) ராணுவ போக்குவரத்து விமானம் (அன்டோனோவ் ஆன் -26) பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானப்படை விமானிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்தினர். ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் விமானம் பறந்து சென்ற போது, கிழக்கு நகரமான சுகுவேவ் என்ற இடத்தில் திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 28 பேரில் 25 பேர் பலியாகினர். இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.விமான விபத்தில் காணாமல் போனவரை தேடும்பணி தீவிரமாக நடக்கிறது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
தகவல்களின்படி, விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உக்ரைன் துணை உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், ‘விமானத்தில் பயணம் செய்தவர்களில் 25 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயான ஒருவரை தேடிவருகிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். ஜெனீவாவை தளமாகக் கொண்ட விமான விபத்துக்கள் காப்பகங்களின் புள்ளிவிபரத்தின்படி, 2017ம் ஆண்டு முதல் அன்டோனோவ் ஆன் -26 விமானங்கள் 10 தடவை விபத்துகளில் சிக்கியுள்ளது. ஆன் -26 என்பது இரட்டை இன்ஜின் டர்போபிராப் விமானமாகும். இது 1969 முதல் 1986 வரை உக்ரைனின் கியேவில் தயாரிக்கப்பட்டது. அந்த நாடு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.