பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்
9/23/2020 5:28:30 PM
பாட்னா: பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்தார். சுஷாந்த் மரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரணையின் போது, பீகார் காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டவர். இப்போது இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, தனது பணிக்காலம் முடிவதற்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, தனது விருப்ப ஓய்வு குறித்து மத்திய, மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் கடிதம் எழுதி இருந்தார். தற்போது இவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டது. பாண்டேவின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக ஆளுநர் பாகு சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ டிஜிபி குப்தேஷ்வர் பாண்டேவின் விருப்ப ஓய்வு ஏற்கப்படுகிறது. டிஜிபி ((ஹோம்கார்ட்ஸ்) எஸ்.கே.சிங்கலுக்கு, டிஜிபி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்தலில் போட்டியிட வசதியாக குப்தேஷ்வர் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காரணம், 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வசதியாக விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு பாண்டே அனுப்பினார். ஆனால், மாநில அரசு அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவர் காவல்துறை பணியில் தொடர்ந்தார். தற்போது அரசியலில் பாண்டே குதிப்பதால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.