திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது
9/17/2020 5:48:01 PM
துரைப்பாக்கம்: சென்னை அடையாறு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளான திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகள் திருடு போவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவான்மியூர் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடினார். கிடைக்கவில்லை.
உடனே திருவான்மியூர் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் அன்புக்கரசு, மற்றும் போலீஸ்காரர்கள் கோபால், ஜெயச்சந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் துரைப்பாக்கம் கண்ணகி நகர் சேர்ந்த 2 சிறுவர்கள் பைக்கை திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்கள், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை திருடுவதை ஒப்பு கொண்டனர். இருவரையும் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.