முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
9/17/2020 5:07:25 PM
அண்ணாநகர்: முகப்பேரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 18 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை முகப்பேர், வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்வி (50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு புறப்பட்டார். அப்போது, வீட்டு சாவியை பரிமளா (35) என்பவரிடம் கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து வைக்கும்படி செல்வி கூறியிருக்கிறார். அதன்படி, தினமும் பரிமளா வீட்டை சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் பூட்டி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை செல்வியின் வீட்டை சுத்தம் செய்ய பரிமளா வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிர்ச்சியானார். உடனே செல்விக்கு தெரியப்படுத்தினார். அவர், விரைந்து வந்தார்.
உள்ளே சென்று சோதனை செய்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் ₹1.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல், இப்பகுதியில் கடந்த மாதம் சுதாகர் ரெட்டி என்பவரின் வீட்டை உடைத்து 8 பவுன் நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.