நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது
9/8/2020 6:26:41 PM
மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். இவ்விவகாரம் தொடர்பாக சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் வசம் உள்ள ரூ.78 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தீபக் கோச்சார் மற்றும் சந்தாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு தீபக் கோச்சாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.