காஞ்சிபுரத்தில் இருந்து கடத்தல் லாரியுடன் 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
9/7/2020 7:24:54 PM
பள்ளிகொண்டா: சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் நோக்கிச்சென்ற ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள், லாரியை சோதனையிட்டனர். அப்போது 350 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் காஞ்சிபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்புக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 19 டன் கொண்ட 350 ரேஷன் அரிசி மூட்டைகளை தொரப்பாடி குடோனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தன்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.