பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: சேலத்தில் 51 பேரை கைது செய்ய சிபிசிஐடி அதிகாரிகள் நடவடிக்கை: 21,000 வங்கி கணக்குகள் முடக்கம்
9/7/2020 6:00:24 PM
சேலம்: பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் 21 சென்ட் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. 2 மாதத்திற்கு ஒரு முறை அவர்களின் வங்கி கணக்கிற்கு ₹2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தமிழகத்தில் 2 தவணையாக 4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதில் போலியாக ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், சேலம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சேவை மையம் நடத்தி வந்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராகுல்(26), கலையரசன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ராகுல் 160 பேருக்கு போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளதும், கலையரசன் 34 பேருக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்து பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது சிபிசிஐடி போலீசார் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார்கள் மேலும், பணம் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று இதுவரை ₹1.20 கோடி திரும்ப பெற்றுள்ளனர். மேலும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சந்தேகத்திற்குரிய 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.