ஆவடி அருகே பயங்கரம்: கல்லால் அடித்து மேஸ்திரி கொலை: சக தொழிலாளர் 2 பேரிடம் விசாரணை
9/7/2020 5:43:53 PM
ஆவடி: ஆவடி அருகே கட்டிட மேஸ்திரி கல்லால் தாக்கிகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக தொழிலாளர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடியை அடுத்த வெள்ளானூர் பார்கவி அவென்யூவில் டாக்டர் ஒருவர், தனது நிலத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி வருகின்றார். இந்த பணிகளில் ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலை காந்தி தெருவை சேர்ந்த மேஸ்திரி மாரிமுத்து (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மோகன், பாபு, பாஷா மற்றும் வெங்கட்ராம் ஆகியோர் ஈடுபட்டனர். நேற்று மாலை சூபர்வைசர் அம்பத்தூர் புதூரை சேர்ந்த அஜிஸ் (29) வந்து வார கூலி 6 ஆயிரத்தை மேஸ்திரி மாரிமுத்துவிடம் கொடுத்து பிரித்துகொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகு அந்த பணத்தில் மாரிமுத்து உள்பட அனைவரும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள கொட்டகையில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
போதை ஏறியதும் மாரிமுத்து சூபர்வைசருக்கு போன் செய்து, ‘’மேலும் 4ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது’’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக சூபர்வைசரும் பணத்துடன் இரவு 10.30 மணி அளவில் வந்துள்ளார். அப்போது அங்கு மாரிமுத்து ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அவரது தலை கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டது தெரிந்தது. இதுபற்றி அஜிஸ் கொடுத்த தகவல்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தியும் சம்பவ நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதன்பிறகு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், மேஸ்திரி மாரிமுத்துவுக்கும் சக தொழிலாளர்களுக்கும் இடையே கூலி பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டிருக்கலாம். இதனால் மாரிமுத்துவை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம்’ என்று போலீசார் கருதுகின்றனர். இதுசம்பந்தமாக தொழிலாளர்கள் மோகன், பாபு ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மேஸ்திரி மாரிமுத்துவுக்கு ரேவதி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.