பட்டுக்கோட்டையில் பரிதாபம் 2 குழந்தைகளை கொன்று தாயுடன் பெண் தற்கொலை: வளர்ப்பு நாய்களும் கொலை
8/24/2020 5:06:57 PM
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் 2 குழந்தைகளை கொன்று தாயுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 வளர்ப்பு நாய்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ராஜகோபால் மனைவி சாந்தி(50). இவரது மகள் துளசி(21). இவரது மகள் சாரல்(2) மற்றும் 10 மாத பெண் குழந்தை. 10 மாதங்களுக்கு முன் ராஜகோபால் இறந்துள்ளார். துளசியின் கணவர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.இந்நிலையில் சாந்தி மகள் துளசி மற்றும் பேத்திகளுடன் கடந்த ஜனவரியில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்துக்கு குடிவந்தார். மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.இவர்களது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளர் சகாதேவனுக்கும், விஏஓ சுமதிக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
பின்னர் விஏஓ சுமதி அளித்த தகவலின் பேரில், பட்டுக்கோட்டை நகர போலீசார் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, படுக்கையில் துளசி, அவரது பக்கத்தில் 2 பெண் குழந்தைகள் சடலமாக கிடந்தனர். இந்த சடலங்களுக்கு அருகில் அவர்கள் வளர்த்த 2 நாய்களும் இறந்து கிடந்தன. சாந்தி மட்டும் சேலையில் தூக்கு மாட்டி தொங்கினார். 4 பேரும் இறந்து கிடந்தை பார்த்து போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: துளசியின் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் உள்ளது. இதனால் முதலில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கலாம். இதைப்பார்த்து தாய் சாந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். துளசியே சென்ற பிறகு அவரது குழந்தைகளை காப்பாற்ற முடியாது என நினைத்து, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கொன்று விட்டு, பின்னர் சாந்தியும் தற்கொலை செய்திருக்கலாம்.
இல்லாவிட்டால், துளசியே முன்னதாக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தற்கொலை செய்திருக்கலாம். இதைப்பார்த்து பின்னர் சாந்தியும் தூக்கு மாட்டி இருக்கலாம். வளர்ப்பு நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம். தொடர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையில் தான் முழு உண்மையும் தெரிய வரும். எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தனர் என தெரியவில்லை. மேலும் துளசியின் கணவர் பற்றியும் எந்த தகவலும் தெரியவில்லை. இவர்கள் அக்கம் பக்கத்தில் யாரிடமும் நெருக்கமாக பழகாததால், இவர்கள் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர். 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே வீட்டில் 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.