திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு
7/30/2020 3:11:56 PM
திருத்தணி: திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண், சவுக்குத் தோப்பில் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி நவநீதி அம்மாள் (55). இவர், பொன்பாடி மேட்டுக் காலனியை சேர்ந்த சிவகாமி (36) என்பவருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
சிவகாமியிடம் பணம் வாங்க செல்வதாக நேற்று முன்தினம் மாலை சென்ற நவநீதி அம்மாள் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் செயல்படவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பொன்பாடி மேட்டுக் காலனி அருகே சவுக்கு தோப்பில் ஒரு பெண் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவல்படி, திருத்தணி டிஎஸ்பி. சேகர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இறந்துக்கிடந்தது நவநீதி அம்மாள் என்று தெரியவந்தது. அவர் வாயில் நுரை தள்ளியிருந்தது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், தாலி செயின், மூக்குத்தி உள்பட 10 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், பணம் வாங்கிய சிவகாமி வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவரை காணவில்லை. ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிவகாமி தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. சாராய கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகாமி, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.எனவே, நவநீதி அம்மாளை நகைக்காக கொலை செய்தார்களா, சிவகாமியிடம் ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.