அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது
7/28/2020 2:39:50 PM
* தப்பி ஓடிய பிரபல நடிகர், நடிகைகளுக்கு போலீஸ் வலை
* பட வாய்ப்பு குறைந்ததால் பணத்திற்காக சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் மற்றும் இளம் பெண்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 12 பி, தில்லாலங்கடி, இன்பா, தூண்டில், உள்ளம் கேட்குமே, லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஷாம் (42). கிழக்கு கடற்கரை சாலையில் தனது குடும்பத்துடன் ஷாம் வசித்து வருகிறார். இவருக்கு நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர் தனது நுங்கம்பாக்கம் வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணம் வைத்து சூதாட்டம் கிளப் நடத்த தனது நண்பர் கோபிகிருஷ்ணாவுக்கு அனுமதி கொடுத்துள்ளார். இந்த சூதாட்டத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சூதாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர்கள், ஏற்றுமதி நிறுவன அதிபர்கள், துணை நடிகைகள் பலரும் இதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்று மாநகர காவல் துறை 144 தடை உத்தரவு போட்டுள்ளது.
அதையும் மீறி நடிகர் ஷாம் வீட்டிற்கு இரவு நேரங்களில் சொகுசு கார்களில் வந்து, தினமும் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி உள்ளனர்.
இது குறித்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்படி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஷாம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஷாம், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
உடனே உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஷாம், பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ராமாபுரத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன்(31), பிரபல ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை செய்யும் சித்தார்த் (31), சாஸ்திரி நகரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஆனந்த் (33), குரோம்பேட்டையை சேர்ந்த நந்த கிஷோர்(39), நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மகன் பட்டேல்(26), ஷாம் வீட்டு வேலைக்காரர் வசந்த்(38), மணி(26), பக்ரூபா(29), அடையாரை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் நசீர்(41), விருகம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(33), அண்ணாநகரை சேர்ந்த இன்ஜினியர் சைமன்(34), கவுசிக்(30) ஆகிய 13 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் மது பாட்டில்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று சூதாட்டத்தின்போது பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்த வருவதாக கிடைத்த தகவலின்படி அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷாம் உள்பட 13 பேர் மீது ஐபிசி 574 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கொரோனா காரணத்தால் அனைவரையும் போலீசார் கடுமையாக எச்சரித்தும், கடிதம் எழுதி வாங்கி கொண்டும் சொந்த ஜாமீனில் வெளியே விட்டனர்.
நடிகர் ஒருவர் தனது வீட்டிலேயே பெரிய அளவில் சூதாட்ட கிளப் நடத்தி வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஷாம் வீட்டில் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வீட்டில் 15 வயது சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டனர்.