மது, கள்ளச்சாராயம் விற்பனை; ஒரே மாதத்தில் 410 பேர் கைது: திருவள்ளூர் போலீசார் அதிரடி
6/5/2020 2:48:59 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர எல்லையில் உள்ளதால், அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி இங்குள்ள கிராமங்களில் விற்கப்பட்டு வந்தது. இதை தடுக்க எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில் போலீசார் கடந்த மே மாதம் நடத்திய சோதனையில் 567 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 410 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8,367 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எஸ்பி அரவிந்தன் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையில் உள்ளதால் அங்கிருந்து கள்ளச்சாராயம் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாலும் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார்.