கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்தி வைக்க முடியாது
3/17/2020 3:37:40 PM
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா நோய் பரவாமல் தடுக்க, வருமுன் காப்போம் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதனை வரவேற்கிறோம். அரசின் அறிவிப்பை தொடர்ந்து திமுக சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2221 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவாமல் தடுக்க இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைத்தால் கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதிக்க அனுமதி வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான முககவசம், கையுறை மற்றும் தற்காப்பு கவசங்களை வழங்க வேண்டும். தமிழக சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், போக்குவரத்து காவலர்களுக்கு வருமுன் காப்போம் நடவடிக்கைகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருந்து அவர் வீடு திரும்பியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தனியார் மருத்துவமனைகளில் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். தேவையான நிதியை ஒதுக்கி, மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: கொரோனா நோயை தடுக்க எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பது ஆரோக்கியமானது. அதை வரவேற்கிறேன். முதல்வர், மூத்த அமைச்சர்கள், ரயில்வே, விமானதுறை அதிகாரிகளுடன் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கையை முதல்வர் எடப்பாடி அளித்துள்ளார். கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் 5 இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு, தினமும் 500 பேருக்கு பரிசோதனை நடந்து வருகிறது. மத்திய அரசின் வைராலஜி துறை தான் ஆய்வகம் அமைக்க அனுமதி அளித்து வருகிறது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் பரிசோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்படும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது. 25 லட்சம் முககவசம் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. வெளியிடங்களில் முக கவசம் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 62 பேர் ஸ்கிரினிங் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,221 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு எதாவது அறிகுறி இருந்தால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 16 எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு, அதுமட்டுமின்றி ரயில்கள், பஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. தமிழக அரசு மக்களை காக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இருந்தாலும் பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நேரத்தில் சட்டசபை நடத்த வேண்டுமா. எனவே, சட்டசபை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. 8 கோடி பேரில் ஒருவருக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் குணமடைந்து விட்டார். எல்லோருக்கும் நோய் வருகிறது. இயற்கையை தடுக்க முடியாது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் அபாயகரமானது. அதற்காக சட்டமன்ற கூட்ட தொடரை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத்திற்கு வரும் அனைவருக்கும் இந்த அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்.